articles

img

12000 வருடப் பழைய புல்லாங்குழல்கள்

    வட இஸ்ரேலில் ஐனைன் மல்லாஹா பகுதியில்  அகழ்வாராய்ச்சியில் கிடைத்த துளையிட்ட எலும்புகள் பழமையான காற்றுக் கருவிகளாம். இசைக்க, பறவைகளை அழைக்க அல்லது சிறிய தொலைவுகளுக்கு தொடர்பு கொள்ள அந்த சிறிய புல்லாங்குழல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் ஜூன் 09 சயின்ஸ் ரிப்போர்ட்ஸ் இதழில் கூறியுள்ளார்கள். ஒரு ஏரிக்கரை பகுதியில் எஞ்சியிருந்த கல் குடியிருப்பில் ஏழு கருவிகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 12000 வருடங்களுக்கு முன்பு வரை அங்கு  வேட்டையாடிகள் மற்றும் உணவு சேகரிப்போர் இன  மக்கள் வாழ்ந்திருந்தனராம். எனவே அந்தப் புல்லாங்குழல்கள் அந்த அளவுக்கேனும் பழமையானது என்கிறார் ஹீப்ரு பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சியாளர் லாரென்ட் டேவின். அந்த ஏரியில் குளிர்காலத்தை கழித்த நீர்ப்பறவைகளின் சிறகு எலும்பிலிருந்தே அவை செய்யப்பட்டிருக்கின்றன என்று நிர்ணயித்துள்ளார்கள். அவற்றில் 63 மிமீ நீளமான பெரிய குழல் உடையாமல் அப்படியே உள்ளது. நுண்ணோக்கியின் மூலம் சோதித்ததில் துளைகள் மனிதர்களாலேயே உண்டாக்கப்பட்டன; எலிகள் கடித்ததாலோ அல்லது இரையாக்கிய விலங்கின் பற்களாலோ உண்டானவை அல்ல என்று தெரிகிறது. தற்கால மல்லார்ட் எனும் பறவையின் சிறகு எலும்பிலிருந்து அதை போன்ற குழல்களை இந்த ஆராய்ச்சியாளர்கள் உண்டாக்கி இசைத்துப் பார்த்தனர். அவை ஏற்படுத்திய உயர்ந்த சுருதியான ஒலி கழுகு குருவி எனும் பறவையின் ஒலியை ஒத்திருந்தது. எனவே இவை பறவைகளை கவர்வதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஐனைன் மல்லாஹா பகுதியில் வசித்தவர்கள் பறவைகளின் எலும்பை கருவிகளாகவும் ஆபரணங்களாகவும் பயன்படுத்தினார்கள் என்பதும் தெரிகிறது. இவை மத்திய கிழக்குப் பகுதியில் கிடைத்த மிகப் பழமையான காற்று கருவிகள் என்றாலும் எலும்புகளாலும் தந்தத்தாலும் செய்யப்பட இதைவிடப் பழமையான புல்லாங்குழல்கள் ஜெர்மனியில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.